சுதாரித்துக் கொண்ட மருத்துவத்துறை
BLOG
10/7/2025


சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து சாப்பிட்டு பல குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மருத்துவத்துறையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக காய்ச்சல், சளி, இருமல், வாந்தி, பேதி போன்ற சாதாரண நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் கூட சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும் என்பதை நம்முடைய வகுப்புகளில் பலமுறை பார்த்திருக்கிறோம். தற்போது நடந்த இந்த துயரமான நிகழ்வில் பல குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, Indian Academy of Pediatrics – National Respiratory Chapter 2025 வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு “இருமல் மருந்துகள் பற்றிய முக்கிய தகவல்கள்” எனும் தலைப்பில் மருத்துவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வாக வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் கொடுத்திருக்கும் அறிக்கையில் சொல்லப்பட்டவைகளை உங்களுக்காக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இருமல் என்பது சளி நோயின் ஒரு இயல்பான அறிகுறி. இது உடலில் உள்ள கசையைக் காற்றுப்பாதையில் இருந்து வெளியேற்றவும், நுரையீரலை பாதுகாக்கவும் உதவுகிறது. இருமலை குறைக்கும் மருந்தில்லாத வழிகள் — வெந்நீர் போன்ற திரவங்களை நிறைய குடிப்பது போன்றவை — தொண்டையை தணிக்க உதவுகின்றன. பெரும்பாலான குழந்தைகள் தானாகவே குணமடைவார்கள். இருமல் அல்லது சளி மருந்துகள் சளி நோயின் இயல்பான குணமாவதை வேகமாக்காது.
சில இருமல் மற்றும் சளி மருந்துகளில் ஆன்டிஹிஸ்டமின் மற்றும் டிகாங்கஸ்டண்ட் போன்ற வேதிப்பொருட்கள் இருக்கும். இவை சில சமயங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம், குறிப்பாக சுவாசம் மெதுவாகுதல் போன்றவை — இது இரண்டு வயதிற்குக் குறைந்த குழந்தைகளுக்கு உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும். இருமல் மருந்து தேவைப்படும் நிலைமை என்பது, இருமல் மிகுந்த தொந்தரவாக இருந்து குழந்தைக்கு சுவாசிக்கவோ தூங்கவோ முடியாதபோது மட்டுமே. இத்தகைய மருந்துகள் நான்கு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே, மருத்துவரின் ஆலோசனையுடன் அளிக்கப்பட வேண்டும்.
இருமல் மருந்துகள் ஒரே ஒரு செயற்கூறு கொண்டதாக இருக்க வேண்டும். பல வேதிப்பொருட்கள் கலந்து தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் அறிவியல் ரீதியாக பொருத்தமற்றவை, எனவே அவற்றை பயன்படுத்த வேண்டாம். Levodropropizine என்ற மருந்து கடுமையான இருமலைக் குறைக்கும் பாதுகாப்பான மருந்தாக கருதப்படுகிறது, ஆனால் இதையும் நான்கு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே, மருத்துவரின் பரிந்துரையுடன் பயன்படுத்த வேண்டும்.
Indian Academy of Pediatrics Respiratory Chapter, இரண்டு வயதிற்குக் குறைந்த குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி மருந்துகளை வழங்க வேண்டாம் என்று வலியுறுத்துகிறது.
பொதுமக்களுக்காகத் தொகுத்தது
கு.நா. மோகன்ராஜ்
மரபு வழி தொடு சிகிச்சையாளர்
Founder of Happy and Healthy Life Solutions
